தூத்துக்குடி அருகே கனிமொழி எம்.பி. திறந்த அரசு மாதிரி பள்ளி

தூத்துக்குடி அருகே கனிமொழி எம்.பி. திறந்த அரசு மாதிரி பள்ளி
X

அரசு மாதிரிப் பள்ளி தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கனிமொழி எம்.பி. அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஊராட்சியில் அமைந்துள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிய அரசு மாதிரி பள்ளியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்த வாய்ப்பினை பெறுவதற்கு இந்த மாதிரி பள்ளியை முதல்வர் ஸ்டாலின் நமக்கு உருவாக்கி தந்துள்ளார். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் மனச்சோர்வு அடையக்கூடாது. தன்னம்பிக்கையோடு உங்களது கல்வியை தொடர வேண்டும்.

இங்கிருக்கக்கூடிய மாணவர்கள்தான் நாளைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையையும் வழிநடத்தக் கூடியவர்களாக வருவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசு இந்த மாதிரி பள்ளியை அமைத்துள்ளது. உங்களுடைய திறமைதான் தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடியது. அது ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும் உங்களால் முடியாதது என்று ஒன்றுமே கிடையாது.


சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பாக பெண்களுக்கு கல்வி என்பது கனவாக இருந்தது. பெரியார் போன்றவர்கள் சமூகத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பாடுபட்டார்கள். பெரியாராக இருக்கட்டும், காமராஜராக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும் அவர்கள் இந்த சமூகத்திற்காக செய்திருக்கின்ற உழைப்பின் காரணமாகத்தான் நாம் இதுபோன்ற பள்ளிகளை உருவாக்கி இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை பேர் தியாகம் செய்திருக்கிறார்கள். எத்தனை தடைகளை எல்லாம் தாண்டி நாம் வந்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருந்தால்தான் நீங்கள் உங்களோடு இருப்பவர்கள் கிராமங்களில் இருப்பவர்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்க முடியும்.

மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவுதான் மிகப்பெரிய ஆற்றலாகும். உங்கள் மனநலம் மற்றும் உடல்நலத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை எந்த காலகட்டத்திலும் விட்டுவிடாமல் உங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் முன்னேறி செல்ல வேண்டும். அதற்கு எங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா