மாற்றுத்திறனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. வழங்கிய செயற்கை உபகரணங்கள்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிவகாசியில் உள்ள அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் என்பது 15 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை புரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்றுத்திறனாளி சசோதர, சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வகையில் அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணாமல் உண்மையாக பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்று இந்த முகாமை நடத்தி இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வேலைகளை தானே செய்வதற்கு இந்த உபகரணங்களை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்த சங்கத்துக்கு 8 ஆம்புலன்ஸ்கள், மொபைல் வேன்கள், இருப்பதாக சொன்னார்கள். நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் செய்யும். உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற முகாம்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை உருவாக்கி தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். எந்தவொரு மாற்றுத்திறனாளியும் சமூகத்தில் தலைநிமிர்ந்து எல்லோரைப்போல கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அத்தனையும் கிடைக்க கருணாநிதி எப்படி பாடுபட்டாரோ அதைப்போல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி தலைவர் விஜய் சர்மா, செயலாளர் சரவண் ஜெயின், இணைச் செயலாளர் கௌஷல் லக்கோகா, பொருளாளர் வருண் தர்கார்க், துணைத்தலைவர் சீதாராம் லெரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu