தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ஆவணங்களை எடுத்துச் செல்லும் வருமான வரித்துறை அதிகாரிகள்.
நூறு ஆண்டுகளை கடந்த பழமையான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள இரண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை வழக்கமான வங்கி அலுவல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது, தலைமை அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய வருமானத்துறை அதிகாரிகள் 16 பேர் 5 வாகனங்களில் திடீரென தலைமை அலுவலகத்துக்குள் சென்று வருமான வரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. சென்னை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை வருமான வரித்துறை இயக்குநரக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருபது மணி நேரமாக நேற்று இரவு முழுவதும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வருமான வரி சோதனை இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் ஆவணங்களை வருமானவரித் துறையினர் எடுத்து சென்றனர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
இந்த சோதனை எதற்காக நடைபெற்றது என்ற உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக கணக்கு காட்டாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்கு தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாடுடன் கணக்கு காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த சோதனை தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு வங்கி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது என்றும் அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து வழங்கினோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu