தூத்துக்குடி மாவட்டத்தில் பனை விதைகள் சேகரிப்பு மற்றும் நடும் பணி தீவிரம்
ஒரு கோடி பனை மர விதைகள் விதைப்பதற்காக பனை விதை சேகரிப்பு மற்றும் தரமான விதைகள் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது.
தமிழர்களின் தேசிய மரமான பனைமரம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் பனை மரங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கோடிக்கணக்கான பனை மரங்கள் இருந்துள்ளது. ஆனால், தற்போது சில வருடங்களாக செங்கல் சூளைகளுக்காகவும், விறகிற்காகவும் அதிகளவில் பனைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக கடற்கரை தீவுப் பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதியான ஆற்றங்கரை, குளற்றங்கரை, வாய்க்கால் பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், விரும்பி கேட்ட தனியாக இடங்களிலும் தொடர்ந்து பனை மர விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த ஆண்டும் பனை மர விதைகளை விதைப்பதற்காக மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமையில் பனை மர விதை சேகரிப்பு பணி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள சேதுக்குவாய்தான், சொக்கப்பழக்கரை, ராஜபதி, குருகாட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
சேகரிக்கப்பட்ட விதைகள் காயல்பட்டினத்தில் உள்ள பனை விதை சேகரிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. அங்கு, சேமித்து வைக்கப்பட்டுள்ள பனைமர விதைகள் விரைவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காயல்பட்டினத்தில் பனை மர விதை நடும் பணியை துவக்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பனை மர விதை விதைக்கும் பணி புன்னக்காயல் முதல் வீரபாண்டிய பட்டிணம் வரை கடற்கரை பகுதிகளில் 700 ஏக்கரில் நடவு செய்யப்பட உள்ளது. பனை விதைகள் சேகரிப்பு மற்றும் தரமான விதைகள் பிரித்தெடுக்கும் பணியில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர் இம்மானுவேல், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாணிக்கம், காயல் நகரச் தலைவர் காயல் பாலா, காயல் நகரச் செயலாளர் சிவா, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி சமூக ஆர்வலர் மரியதாஸ் உட்பட பலரும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu