தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் பனை மர விதைகள் நடவு செய்யும் பணி துவக்கம்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பனை மர விதைகள் நடவு செய்யும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் பணிக்கான துவக்க விழா தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பனை விதைகள் நடைவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கழகம் சர்பில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாயபுரம் போப் கலைக்கல்லூரி ஆகியவை சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று காலை தொடங்கியது. இந்த பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
இதேபோல, மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், வேம்பார் கடற்கரை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனும் பனை மர விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu