தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
X

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப்படகுகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு, பைபர் படகு மற்றும் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மட்டும் தினமும் காலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், மீன்பிடி படகுகளுக்கு லைசன்ஸ் வாங்க வேண்டும், மேலும், ஒரு படகில் நான்கு மீனவர்களுக்கு மேல் மீன் பிடிக்க செல்லக்கூடாது, மீன்பிடி படகுகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும், மேலும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளுக்கு பச்சை வண்ணம் பூச வேண்டும். படகில் பயன்படுத்தப்படும் இஞ்ஜினுக்கு ஜிஎஸ்டி பில் வேண்டும். படகை புதிதாக செய்ததற்கான ஜிஎஸ்டி பில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த சான்றுகளை வழங்கும் படகுகளுக்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் சார்பில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திரேஸ்புரம், அமலிநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆலந்தலை, பெரியதாழை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் இன்று மீன் பிடித் துறைமுகங்களில் மீன் ஏலமும் நடைபெறவில்லை என்பதால் ஒரு நாளில் மட்டும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!