தூத்துக்குடியில் 2 பேருக்கு ரூ. 17.17 லட்சம் மானியத்துடன் பயணிகள் வாகனம்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவருக்கு பயணிகள் வாகனத்துக்கான சாவியை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவை சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.17.17 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 49.66 லட்சம் திட்ட மதிப்பிலான இரண்டு பயணிகள் வாகனங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளிடம் வாகனங்களுக்கான சாவியை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தொழில் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழில்களையும் தொழில் முனைவோர்களையும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும். தற்பொழுது தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் அதிக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த மையம் பல்நோக்கு அடிப்படையில் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.
அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் ஆகியவை மூலம் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலான மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu