தூத்துக்குடியில் 27 பவுன் நகைகள் திருடியதாக கணவன்-மனைவி கைது
கைதான கணவர், மனைவியிடம் இருந்து மீட்கப்பட்ட 27 பவுன் தங்க நகைகள்.
தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் இருந்த 27 பவுன் தங்க நகைகளை திருடிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரி திருமணி (65) என்பவர் கடந்த 26.07.2023 அன்று தனது வீட்டு சாவியை பக்கத்து வீட்டுக்காரரான அதே பகுதியை சேர்ந்த பில்லாயூஸ் மகன் ஜெய்ஸ் (34) என்பவரிடம் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.
திருமணி தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார். மீண்டும் நேற்று (01.11.2023) அவர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டில் பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளது.
இதுகுறித்து திருமணி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணியின் பக்கத்து வீட்டுக்காரரான ஜெய்ஸ் என்பவர் தனது மனைவி ஆஷா (28) என்பவருடன் சேர்ந்து திருமணியின் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஜெய்ஸ் அவரது மனைவி ஆஷா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கைதான கணவன், மனைவியிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 7,80,000 மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu