வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கணவன்-மனைவி கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. காவல் துறையினர் பல முறை எச்சரித்தும் மோசடி சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்த அகஸ்டின் (35) மற்றும் அவரது மனைவி சலோமி பெபினா (32) ஆகியோர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களிடம், தங்கள் மூலம் வெளிநாட்டு கப்பலில் வேலைக்குச் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி வந்தனராம்.
மேலும், வேலைதேடும் இளைஞர்களை நம்ப வைத்து தலா ரூ. 2,50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுக்கொண்டு, இதுவரை 13 நபர்களை ஈரானுக்கு அனுப்பி குறைவான ஊதியமுள்ள வேலையில் அமர்த்தி சுமார் 30 லட்சம் வரையில் சுயலாபம் அடைந்ததுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், வேலைதேடிய மூன்று பேர்களிடம் சுமார் 10,00,000 ரூபாய் வரையில் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அகஸ்டின் மற்றும் அவரது மனைவி சலோமி பெபினா ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu