தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கனமழை: அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு
அவசர .உதவிக்கு எண்கள் அறிவிப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் 390 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் உதவி தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையத்தை 9445854718 என்ற எண்ணையும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 101 மற்றும் 112 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் அறிவிப்பு:
தூத்துக்குடி மாநகாரட்சி மேயர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மழை நீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் எந்த பயமும் கொள்ள வேண்டாம்.
தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையர், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் மாநகர மக்களுடன் உறுதுணையாக இருப்போம். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 18002030401 என்ற கட்டணமில்லா அழைப்பு எண்ணில் மழை முடியும் வரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி 8754299969 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu