38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தூத்துக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயண பேரணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் சார்பில், தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்று நடைபெற்றது.
பேரணியை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
உலக இருதய தினம் என்பது செப்டம்பர் 29 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு வேர்ல்டு ஹெல்த் பெடரேஷன் அமைப்பின் சார்பில் அதன் தலைவரான அண்டனி பாய் கிருனா என்பவரால் உலக இருதய தினம் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இருதய பாதுகாப்பு அவசியமான ஒன்று என்பது மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்களுக்கு நன்றாக தெரியும். கொரோனா தொற்றுக்கு பிறகு பெரிய அளவில் இருதய பாதிப்பு ஏற்பட்டு வருவதை உலகம் உணர்ந்திருக்கிறது. முன்பு மாரடைப்பு 40, 50, 60 வயதை கடந்தவர்களுக்குதான் வரும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று 40, 50, 60 வயதுக்குள்ளேயே மாரடைப்பு வருகிறது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்றவை இருதய நோய்க்கான காரணங்களை தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து வருகின்றன. இருதய நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது, நமது வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த உலக இருதய தின நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் இதயத்தை பயன்படுத்தி இதயத்தை அறிந்துகொள் என்பதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நான் ஜப்பான் சென்றிருந்தபோது டோக்கியோவில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த ஹெல்த் வாக் சாலையை பார்த்தேன். இந்த சாலையை பற்றி கேட்கும்போது, ஹெல்த் வாக் சாலையை பார்ப்பவர்கள் இந்த சாலையில் மட்டுமல்ல நமது வீட்டின் அருகிலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தரும் என்று சொன்னார்கள்.
உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஹெல்த் வாக் நடைபாதையை தேர்வு செய்திருக்கிறோம். சாலையின் இருபுறமும் மரங்கள் நடுதல், ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நேரம் அறிவிப்பு வைப்பது, நடப்பதன் பயன்கள் பற்றி பதாகைகள் வைப்பது, ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமர்வதற்கு இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலை திறக்கப்பட உள்ளது.
நாம் நடப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். நடைப்பயிற்சி உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவசியமான ஒன்று. அந்த வகையில்தான் அனைத்து மாவட்டங்களிலும் நடப்பதற்கு சாலைகளை அமைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு 27.06.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் என 10999 மருத்துவமனைகளிலும் இருதய பிரச்னைக்கு ஆஸ்பிரின் - 2, க்ளோபிடோக்ரல் - 4, அட்ரோவாஸ்டாட்டின் - 8 என மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
எனவே இருதய பிரச்சனை தொடர்பாக ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இதயம் காப்போம் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கீதாஜீவன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் 8 கிலோ மீட்டர் தொலைவு நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu