தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலர் டிஸ்மிஸ்

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலர் டிஸ்மிஸ்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் எஸ்.பி உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 9.05.2021 அன்று மத்தியபாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என்று காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி விட்டு சென்று உள்ளார்.

இதற்கிடையே, அதே நாள் இரவு தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, லூர்து ஜெயசீலன் கொலை தொடர்பாக முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தலைமைக் காவலர் பொன் மாரியப்பனையும் போலீசார் 10.5.2021 அன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பொன் மாரியப்பன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவர் உத்தரவின்படி கடந்த 22.05.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. இதையெடுத்து, அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் தலைமை காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள தலைமை காவலர் பொன்மாரியப்பனை பணியில் இருந்து டிஸ்மிஸ் (Dismissed from Service) செய்வதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா