நெல்லை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

நெல்லை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட பேச்சியப்பன் என்ற கண்ணன்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியாக்காவிளை பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் நடேசன் என்பவரது மகனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இருந்து இளநிலை உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை வந்துள்ளது. இதையறிந்த நடேசன் தனக்கு தெரிந்த திருநெல்வேலி பிருந்தாவன் நகரை சேர்ந்த பேச்சியப்பன் என்ற கண்ணனை (67) அணுகி உள்ளார்.

இதையெடுத்து, இளநிலை உதவியாளர் பணிக்கு டெபாசிட் பணம் ரூபாய் 3 லட்சம் கட்டினால்தான் வேலை கிடைக்கும் என்று பேச்சியப்பன் கூறி உள்ளார். இதை நம்பிய நடேசன் தனது உறவினரான மகேஷ் என்பவரின் தூத்துக்குடியில் உள்ள வங்கி கணக்கிலிருந்து 2019 ஆம் ஆண்டு ரூபாய் 3 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால், நடேசனின் மகனுக்கு வேலை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி ரூ. 2.50 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து, பேச்சியப்பன் தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்ததாக திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமாரிடம் நடேசன் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மோசடி வழக்கு தொடர்பாக பேச்சியப்பன் என்ற கண்ணனை திருநெல்வேலி பிருந்தாவன் நகரில் வைத்து இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்