தூத்துக்குடி மாவட்டத்தில், 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில், 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது (மாதிரி படங்கள்)
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 06.08.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவராமமங்கலம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (70) என்பவரை சொத்து பிரச்னை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்தவர்களான பூல்பாண்டி (42), சாமிநாதன் (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைதான பூல்பாண்டி மற்றும் சாமிநாதன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதேபோல, கடந்த 08.05.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் காந்திபுரம் பகுதியில் விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த சாரூக் ராஜா (28) மற்றும் சிலரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வழக்கில் கைதான சாரூக் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், கொலை வழக்கில் கைதான ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்தவர்களான பூல்பாண்டி, சாமிநாதன் மற்றும் கஞ்சா வழக்கில் கைதான திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த சாரூக் ராஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் உட்பட 116 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu