தூத்துக்குடி மாவட்ட பேக்கரி வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்ட பேக்கரி வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்கள்
X
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேக்கரி வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையெடுத்து, அங்கு சோதனை மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் அந்த பேக்கரியின் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்தனர். தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக அங்கு கைப்பற்ற பொருட்களை பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேக்கரி வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தயாரித்த கேக்கை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கும் கேபினட்டை உரிய வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். கேக்கின் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை எழுதி காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். கேக்கினைத் தயாரித்து, தூய்மையான சூழலில், தூய்மையான தட்டில் இருப்பு வைக்க வேண்டும்.

கேக் உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களையும் பாதுகாப்பான சூழலில் தயாரித்திடல் வேண்டும். பேக்கரி பணியாளர்கள் “தொற்றுநோய் தாக்கமற்றவர்” என்று மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு டைஃபாய்டு உள்ளிட்ட உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

முட்டையில் இயல்பாகவே பாக்டீரியாக்கள் இருப்பதினால், கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டையை மட்டுமே கேக் தயாரிக்கப் பயன்படுத்திடல் வேண்டும். ஃப்ரீசர் மற்றும் குளிர்பதனப்பெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வணிகர்கள் உரிய வெப்பநிலையை பராமரிப்பதற்கான பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும். ஃப்ரீசர் தூய்மையாக இல்லையெனில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பேக்கரியில் உள்ள உணவுப் பொருட்களை ஈ உள்ளிட்ட பூச்சிகள் மொய்க்காவண்ணம் பாதுகாக்க வேண்டும். காலாவதியான கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றி, பதிவேடு பராமரிக்க வேண்டும்.

நுகர்வோர்கள், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதிக் காலம் அறிந்து வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்

மேலும், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனை குறித்து நுகர்வோர்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ அல்லது TN Food Safety App-ற்கோ புகார் அளிக்கலாம். அவர்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business