Govt Hospital Staff Shortage தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை உபகரணங்களை சிறுவன் சுத்தம் செய்த அவலம்
விசாரணை நடத்தும் மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் மற்றும் மருத்துவர்கள்.
Govt Hospital Staff Shortage
தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், உள்ளிட்டோர் தொடர்ந்து மூன்று மணி நேரம் மருத்துவமனையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேட்டை சரி செய்ய உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த கத்திரிக்கோல் மற்றும் கத்தி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சிறுவன் ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Govt Hospital Staff Shortage
அதாவது, தூத்துக்குடி சோட்டையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் சர்க்கரை நோய் காரணமாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்ந்துள்ளார். அவரது காலில் இருந்த ஒரு விரல் அகற்றப்பட்டு தொடர்ந்து ஐந்தாவது மாடியில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நோயாளி பால்ராஜிக்கு அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழைய கட்டை அவிழ்த்துவிட்டு புதிய கட்டு போடக்கூடிய பணியை செய்துள்ளனர். அப்போது பயன்படுத்திய கத்தரி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை பால்ராஜின் படுக்கை அருகே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ரத்தம் தோய்ந்த அந்த கத்திகளை பால்ராஜ் தனது மகனை விட்டு சுத்தம் செய்ய சொன்னதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமையிலான குழுவின் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:
மருத்துவ உபகரணங்களை சிறுவன் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவறுதலாக நடந்து விட்டது. இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது. இந்த தவறு குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu