தூத்துக்குடியில் 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: மாநகராட்சி நடவடிக்கை
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
Government Land Recovery
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் தனி நபர்கள் மற்றும் சில நிறுவங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றை மீட்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதேபோல, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான நிலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குறிப்பாக சின்னமணி நகர் மற்றும் ஆசிரியர் காலனி சந்திப்பு மற்றும் கந்தன் காலனி ஆகிய பகுதிகளில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 11 சென்ட் பரப்பளவு உள்ள ரூ. 3 கோடி மதிப்பிலான நிலங்கள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது.
போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கட்டிடம் அகற்றப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இதுபோன்று அரசு நிலங்களை தற்காலிக மற்றும் நிரந்தர தடுப்புகளால் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் உடனடியாக தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அகற்ற தவறும் நிலையில் மாநகராட்சியால் அகற்றப்பட்டு அதற்கு ஆகும் செலவினங்களையும் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu