தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் தங்கநகை பாலிஷ் மோசடி
கைது செய்யப்பட்ட சோனுகுமார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கநகைகளுக்கு பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது. இதையெடுத்து, பலரை கைது செய்த போலீசார், தங்கநகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறும் நபர்களிடம் கவனமாக இருக்கும்படியும், யாரும் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
இருப்பினும், சில கிராமங்களில் இதுபோன்ற சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடிய வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர் (66) என்பவரது மகள் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சிவநந்தன் மகன் சோனுகுமார் (22) என்பவர் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பி அந்தப் பெண் நகையை கொடுத்த நிலையில், பாலிஷ் செய்து தருவதாகக் கூறி நகையை ஏமாற்றி திருடிய சோனுகுமார் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து சோனுகுமாரை கைது செய்தார்.
கைதான சோனுகுமாரிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 சவரன் தங்க நகையையும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் பறிமுதல் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று தங்கநகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடியில் ஈடுபடுவோரிடம் யாரும் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu