கடலில் பேனா சின்னம்: தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்.. ஜி.கே. வாசன் பேட்டி...
தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டியளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவராக உள்ள விஜயசீலனின் 50 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு விஜயசீலனை வாழ்த்தினார்.
தொடர்ந்து, ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் இரண்டு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. நேரடியாக சென்று ஆய்வு செய்து தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தவறிவிட்டது. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆபத்தான நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு இருக்க தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கக் கூடிய செயல்களில் இந்த அரசு செயல்பட கூடியது வருத்தம் அளிக்கிறது. கடந்த 19 மாத கால திமுக ஆட்சி குறைகளை பற்றி பேசினால் போதும். அதுவே ஈரோட்டில் அதிமுகவின் வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சென்னை கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த, ஜி.கே. வாசன், கருணாநிதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறேன்.
மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல் அவைகளுக்கு எல்லாம் முறையாக சரியாக, அனுமதி ஒப்புதல் பெற்று தமிழக அரசு மக்கள் மத்தியிலே இருக்கின்ற நல்ல கருத்தை கேட்டு சரியான முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), விஜயசீலன் (தெற்கு) மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu