கஞ்சா விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

கஞ்சா விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா வழக்கில் கைதானவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்பட 80 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இந்த வழக்கில் இலங்கையை சேர்ந்தவர் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையை பூர்விகமாக கொண்ட, சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த ஜோசப் கனுட் ஸ்ரீபாலன் (வயது 63) என்பவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்து உள்ளது.

இவர் தமிழகம், ஆந்திரா மற்றும் இலங்கையில் உள்ள கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் மூலம்தான் இலங்கையில் உள்ள கடத்தல் காரர்களை தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரை மத்திய ரா உளவுப்பிரிவினர் ஏற்கெனவே கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜோசப் கனுட் ஸ்ரீபாலன் கைது செய்யப்பட்டு இருப்பதால், மத்திய, மாநில உளவுப்பிரிவை சேர்ந்தவர்கள் புழல் சிறையில் அடைக்கபபட்டு உள்ளவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா கடத்தல் சங்கிலி உடைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 92 வழக்குகள் பதிவு செய்து, 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 755 கிலோ கஞ்சா மற்றும் 34 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் 47 கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்பட மொத்தம் 80 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ. 8 லட்சத்து 4 ஆயிரம் முடக்கப்பட்டு உள்ளது. இதுவரை போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் உள்பட 106 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என, பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை