தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
X

தூத்துக்குடியில், ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. (கோப்பு படம்)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைதான 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று ஒரே நாளில் 6 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 18.08.2023 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை அல்லிகுளம், முருகன் நகர் பகுதியில் உள்ள பழைய குவாரியில் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர பெருமாள் (23) என்பவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி தட்டப்பாறை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பொன்முத்துராம் (20) மற்றும் சிலர் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில், பொன்முத்துராம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 17.08.2023 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அம்பேத்கர்நகரை சேர்ந்த கனி என்பவரது மனைவி அந்தோணியம்மாள் (67) என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்தனராஜ் (23) என்பவரை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைதான சந்தனராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 03.08.2023 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த தெய்வக்கண்ணன் (35) மற்றும் சிலரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைதான தெய்வக்கண்ணன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 03.10.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழிக்குடி ரோடு பகுதியில் வந்து சென்றுகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முறப்பநாடு பாறைக்காடு பகுதியை சேர்ந்த சிவசிதம்பரம் (19), முறப்பநாடு அகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (19) மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (21) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான சிவசிதம்பரம், ராமசாமி மற்றும் துரைப்பாண்டி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில், கைதான 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று உத்தரவிட்டார்.

இதையெடுத்து, சம்பந்தப்பட்ட 6 பேரையும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story