வெளிமாநில இளைஞர் கொலையில் கைதானவர்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநில இளைஞர் கொலை வழக்கில் கைதானவர் உள்பட 3 பேரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 17.05.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜ்கண்ணா நகர் பகுதியில் வைத்து ராஜஸ்தான் மாநிலம் தில்வாரா பகுதியைச் சேர்ந்த வினோத் தாரகா (29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் ராஜ்கண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (22) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைதான கந்தசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 19.05.2023 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்த ரமேஷ் (29) என்பவரை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைதான ரமேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 16.05.2023 அன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளைப்பட்டி கடற்கரை சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடக்கில் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த பட்டுராஜா (36) என்பவரை தருவைகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைதான பட்டுராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் ராஜ்கண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த பட்டுராஜா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்/
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu