தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்ளுவதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசின் நிதியுதவியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்ளுவதற்கு நிதிஉதவி பெறலாம்.

தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ .2 லட்சமாகவும், 15 முதல் 20 வருடமாக இருப்பின் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாகவும் நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்.

தேவாலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதிஉதவியும் பெற்றிருத்தல் கூடாது. விண்ணப்பத்துடன் தேவாலயம் கட்டடத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணை நகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்டநாள், தேவாலய கட்டடத்தின் ஸ்திரத்தன்மை சான்று உள்ளாட்சி அமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம்.

தேவாலயம் முகப்புதோற்றம் மற்றும் பழுது ஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள், தேவாலயம் சுயாதீனம் வகையாக இருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும். தேவாலயம் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஐஎப்எஸ்சி எண், எம்ஐசிஆர் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தக ஒளிநகல் ஆகிய ஆவணங்களை விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை படியிறக்கம் செய்து விண்ணப்பபடிவத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future