தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
‘மிக்ஜம்”; புயலினால் ஏற்பட்ட கனமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், 5 லட்சத்து 34 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான புயல் நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக்கடுமையான அளவிற்கு வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொது மக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘மிக்ஜம்” புயல் சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெருமளவில் சேதத்தை உண்டாக்கியுள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை ஒவ்வொரு மாவட்டம் முன் வந்து அனுப்பி உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு முயற்சியாக அவர்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய பொருட்களான 9422 தண்ணீர் பாட்டில்கள், 3188 கிலோ அரிசிகள், 75 கிலோ பருப்பு வகைகள், 155 கிலோ பால் பவுடர், 20 பாக்ஸ் பிஸ்கட், 3 பாக்ஸ் ப்ரட், 40 போர்வை உள்ளிட்ட ரூ. 5,34,720 மதிப்பிலான பல்வேறு அத்தியாவசிய அடிப்படை நிவாரணப் பொருட்கள் முதற்கட்டமாக, இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்களுடைய பங்களிப்புடனும், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உதவிகளுடன் தொடர்ந்து அனுப்பி வைக்க உள்ளோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பெருமளவில் பாதிப்பை சந்தித்துகொண்டிருக்கக்கூடிய சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரணம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநாராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu