வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: தூத்துக்குடியில் 2 பேர் கைது
பைல் படம்
சேலம் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் மோகனகுமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மல்லிராஜா மகன் சதீஷ்குமார் (40) ஆகிய இருவரும் சேலம் பத்மாவதி காலணியில் "விக்டரி மேன் பவர்" என்ற பெயரில் உள்ள நிறுவனம் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து உள்ளனர்.
அதனை நம்பி, தூத்துக்குடி பொன்சுப்பையாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் ரமேஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். இதையெடுத்து, அவர்கள் இருவரும் செல்வகுமாரை பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும் அதற்கு ரூபாய் 4,70,000 பணம் செலவாகும் என்றும் அதற்கு முன்பணமாக 70 ஆயிரம் பணம் செலுத்தினால் ஒரு மாதத்திற்குள் விசா வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
மேலும், விசா வழங்கியவுடன் மீதமுள்ள தொகையை செலுத்தினால் போதும் என நம்பிக்கை வார்த்தைகள் கூறி செல்வகுமாரின் மொபைல் G Pay மூலம் ரமேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு கடந்த 27.07.2022 அன்று ரூபாய் 10,000 பணமும், அதேபோன்று கடந்த 04.08.2022 அன்று ரூபாய் 60,000 பணம் என மொத்தம் ரூபாய் 70 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் விசா தருவதாக இருவரும் கூறி உள்ளனர்.
இதனையடுத்து இரண்டு மாதம் ஆகியும் விசா வராததால் செல்வகுமார் சந்தேகம் அடைந்து இரண்டு பேரையும் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்வகுமாரின் வங்கி கணக்கிற்கு பணத்தை திருப்பி அனுப்புவதாக அவர்கள் இருவரும் கூறி ஏமாற்றி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 22.12.2022 அன்று செல்வகுமார் நேரில் சென்று மேற்படி ரமேஷ்குமார் மற்றும் சதீஷ்குமாரிடம் பணத்தை கேட்டபோது அவர்கள் இருவரும் செல்வகுமாரிடம் பணம் தர முடியாது என்று கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செல்வகுமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். செல்வகுமாரின் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்க எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில்,மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஸ்டீபன் டேவிட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில், மோசடி செய்ததாக ரமேஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu