எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்போரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்..

எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்போரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்..
X

விளாத்திக்குளம் அருகே பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்வோரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா இருக்கும் இடமே கோயில் என்பதால் சட்டமன்றத்தில் செருப்பு அணியாமல் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை தலைமையேற்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவரும் இவரே.

அதன்பிறகு, அதிமுக பிளவு பட்டபோது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தற்போது வரை அவரது ஆதரவாளராகவே தொடருகிறார். தமிழக அரசியலில் உதயகுமார் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிக்கடி விமர்சனங்களை ஏற்படுத்துவது உண்டு.

இந்த நிலையில், தனது மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ள உதயகுமார், அந்த நிகழ்வுடன் மேலும், 50 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கவும் அதிரடி திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கே. சுப்பையாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து பூஜை செய்தார். இந்தக் கோயில் அவரது குலதெய்வம் கோயில் ஆகும்.

கோயிலில் வழிபாட்டை முடித்துக் கொண்ட உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவை வழிநடத்த உறுதி எடுத்து நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த பயணத்தில் எல்லோரையும் அழைக்கிறோம். எல்லோரையும் சிவப்பு கம்பளம் விரித்து வருக, வருக என வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை.

ஆனால், ஊடகங்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு திரித்து கூறும் நிலை உள்ளது. தாய் உள்ளத்துடன் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்வதாக தான் இருக்கிறார்கள். அதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கெனவே, இரண்டு பேர் தலைமையாக இருந்து எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. ஆனால், மற்ற இடங்களில் கிடைக்கவில்லை. இதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும்.

எனவே, காலத்திற்கேற்ப முடிவு எடுத்தால் தான் இயக்கத்தினை காப்பாற்ற முடியம். இதுபோன்ற தொண்டர்களின் கருத்தினை தான் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட கருத்தின் படி எந்த முடிவும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வத்தையும் இணைத்துக் கொள்வீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால், அவரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.

Tags

Next Story