தமிழ் திரைப்படங்களின் தற்போதைய நிலை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..
கோவில்பட்டியில் பேட்டியளித்த கடம்பூர் ராஜூ எம்எல்ஏ.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி தற்போதையை சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்றுக் கொண்டார். அதேபோல் ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் நிலை குறித்து நேரடி ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிலேயே இல்லை. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே நடந்து முடிந்து விட்டது. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து உள்ளனர். இதுதான் அமைப்பு ரீதியான அதிமுக. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரின் கருத்து அதிமுகவுக்கு பொருந்தாது.
கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், திமுகவுடன் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் பேரத்தின் அடிப்படையில் இருக்கின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியிலே ஒரு கால்பந்து வீராங்கனை மரணம் என்பது வேதனை அளிக்கிறது. பொதுவுடைமை கட்சிகள் எல்லாம் கால்பந்து வீராங்கனை மரணம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.
தற்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை சீரழிந்து விட்டது. சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத் துறை உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ் திரையுலம் சுதந்திரமாக இருந்தது. தற்போது, தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வந்தால் தான் தமிழகத்தில் படங்கள் திரையிடப்படும் முடியும் என்ற சூழல் உள்ளது.
திரைப்படம் எடுத்தாலும் வெளியிடப்பட முடியாத சூழ்நிலை தான் உள்ளது. அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் கூட, முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூலம் தான் திரையிட முடியும் என்ற சூழல் உள்ளது. எதிர் காலத்தில் படம் வெளியிடுவது மட்டும் இல்லாமல், படம் எடுக்கவும் முடியாது என்ற சூழ்நிலை உருவாகும். தமிழ் திரைத்துறை அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் செய்தி விளம்பரத் துறை அரசின் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்றது. ஆனால் தற்போது அரசு நிகழ்ச்சி மற்றும் முதல்வர் நிகழ்ச்சிகளை தனியார் மையமாக்குவது என்பது மோசமான சூழ்நிலையை உருவாக்கும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu