குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு: கனிமொழி எம்.பி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கனிமொழி எம்.பி. கடனுதவி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில், காமராஜ்; கல்லூரியில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடனுதவி வழங்கினார்.
இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு,நடுத்தரதொழில்களை சார்ந்துதான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு. குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இந்த தொழில்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது கிடையாது. ஏனென்றால் அவைதொழில் நுட்பங்கள் சார்ந்தவை.
ஆனால் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக் கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள்தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது மிகப்பெரிய கனவு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் கடன் வழங்குவதற்கான இலக்கினை அடையவில்லை.
திருப்பூர் மாவட்டம் ரூ. 400 கோடி அளவிற்கு கடன் வழங்கி இருக்கிறது. நாம் தற்போது ரூ. 315 கோடி மதிப்பில் கடனுதவியினை தற்போது வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். சிறு. குறு,நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடிநிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
சிறு. குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் திட்டத்தினை வகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி உள்ளார். அதேபோல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் சிப்காட் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் மறந்து விடமுடியாது.
நாம் கடன் வாங்கி இன்னும் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்றால் இப்போது வாங்கிய கடனை சரியாக கட்ட வேண்டும். நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களுக்கு கடன் வழங்கி உள்ளார்கள். சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu