தூத்துக்குடி அருகே பேக்கரிக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் பேக்கரிக்கு சீல் வைத்தனர்(கோப்பு படம்)
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பூச்சியுடன் வைன் பிஸ்கட் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து அந்த பேக்கரியில் திடீரென ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின் போது, அந்த பேக்கரியில் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதுடன், செல்லத்தக்க உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும் கண்டறியப்பட்டது. எனவே, அந்த பேக்கரியின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு, முன்னேற்ற அறிவிப்பு வழங்கவும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வணிகம் புரிந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, 10 உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் மேற்கொண்டது அறியப்பட்டு, மூடப்பட்டது.
மேலும், இரண்டு கடைகள் தமது விற்றுக்கொள்முதலைக் குறைத்துக் காண்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்திற்குப் பதிலாக, பதிவுச் சான்றிதழ் பெற்ற இரண்டு உணவகங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர், அந்த வணிகர்கள் இணையதளம் மூலமாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பின்னர் கடைகள் மீண்டும் திறந்துவிடப்பட்டன.
உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவு வணிகம் புரிந்த குற்றத்திற்காகவும், தவறான தகவல் வழங்கி, பதிவுச் சான்றிதழ் பெற்ற குற்றத்திற்காகவும், அந்த வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu