ஷவர்மா உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை (மாதிரி படம்)
நாமக்கலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறையினர் ஷவர்மா உணவகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உணவு பாதுகாப்புத் துறையினர் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
ஷவர்மா உணவு விற்பனை செய்யும் வணிகர்கள் ஷவர்மா அடுப்பை தூசிகள் மற்றும் பூச்சிகள் விழாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்திடல் வேண்டும். சிக்கன் வெந்திருந்தாலும், அதனை தவாவில் சிறிது நேரம் வேக வைத்து, ஷவர்மா ரொட்டியில் பயன்படுத்த வேண்டும். மிதமான சிக்கனை அன்றே உரிய முறையில் அழித்திடல் வேண்டும்.
உரிய லேபிள் விபரங்களுடன் உள்ள ஷவர்மா ரொட்டிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்திடல் வேண்டும். உணவகப் பணியாளர்களுக்கு “தொற்றுநோய் தாக்கமற்றவர்” என்று மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு டைஃபாய்டு உள்ளிட்ட உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
முட்டையில் இயல்பாகவே பாக்டீரியாக்கள் இருப்பதால், கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட “மையோனைஸ்” மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்படாத முட்டையில் தயாரித்த “மையோனைஸ்” பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஃப்ரீசர் பயன்படுத்தும் வணிகர்கள் உரிய வெப்பநிலையை பராமரிப்பதற்கான பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும். ஃப்ரீசர் தூய்மையாக இல்லையெனில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
ஷவர்மா உணவு வாங்கும் நுகர்வோர் ஷவர்மா உள்ளிட்ட அனைத்து இறைச்சி வகை உணவுகளையும் தினசரி அல்லாமல், உடலின் எடை அல்லது உடலில் உள்ள நோய்களின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு சாப்பிடலாம். ஷவர்மாவை சாப்பிடும் முன்னர், “மையோனைஸ்” தயாரித்த முறை அல்லது அதன் காலாவதி நாள் ஆகியவற்றை உணவகப் பணியாளர் மூலம் அறிந்து சாப்பிட வேண்டும்.
ஷவர்மா உள்ளிட்ட அனைத்து இறைச்சி வகை உணவுகளையும் சாப்பிடும் முன்னர் அதில் ஒவ்வாத வாடை வந்தால் சாப்பிடக்கூடாது. ஒரு வேளை ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை சாப்பிட்ட ஆறு மணி நேரத்திற்குள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், டாக்டரிடம் சென்று, உரிய சிகிச்சை பெற வேண்டுமே தவிர, சுயமாக மருந்தகத்தில் மருந்து வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. மேலும், உணவகத்தில் உணவு சாப்பிட்டதினால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டால், மருத்துவர் மூலமாகவோ அல்லது தாங்களாகவோ உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் வழங்க வேண்டும்.
மேலும், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனை குறித்து நுகர்வோர்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின் 86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ அல்லது TN Food Safety App-ற்கோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu