தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சி காரணமாகவும் கிழக்கு திசையில் காற்றில் விசை வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதற்கிடையே மேற்குதொடர்ச்சி மழை பகுதியில் தொடர்ந்து தீவிர மழை பெய்து வருவதால் தாமிரபணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி கொள்ளளவு நீர்வரத்து உள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!