மழை வெள்ள பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி..!
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை தொல். திருமாவளவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வழங்கினார். 2000 பேருக்கு அரிசி, போர்வை, மளிகை பொருள்கள் உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கினார்.
தொடர்ந்து, தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும். மக்கள் அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் தன்னார்வலர்கள் இறங்கி உதவி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6000 பேருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான உதவிகளை வழங்கி வருகிறோம். மத்திய அரசு வெள்ள பாதிப்பிற்காக தமிழக அரசு மற்றும் முதல்வர் கோரியபடி 21 ஆயிரம் கோடியை பேரிடர் நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரம் முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குப்பதிவு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து சென்னையில் ஜனவரி 4 ஆம் தேதி போராட்டம் நடத்துகிறோம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களை வெறுங்கையோடு வந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார்.
அதுவும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஏரல்ஸ காயல்பட்டினம் ஆகிய பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய அமைச்சர் நேரடியாக வந்து சில பகுதிகளை பார்வையிட்டது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எவ்வித நிவாரண பணிகளிலும் ஈடுபடவில்லை. மத்திய அரசு இந்த பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடராக மத்திய அமைச்சர் அறிவிக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu