தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை
X

தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப்படகுகள்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் மூன்றாவது வார இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், திடீரென எழுந்த புயல் காரணமாக கடந்த மாதம் தமிழக கடற்கரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், மீனவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடற்பகுதி மற்றும் குமரி கடல் பகுதி அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வரும் இரண்டு நாட்கள் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என மீன்வளத் துறைக்கு வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மறு அறிவிப்பு வந்த பின்னரே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!