மானிய விலையில் புதிய மின்மோட்டார் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் புதிய மின்மோட்டார்கள் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில்; நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க தமிழக அரசு அறிவித்தபடி 2022-23 ஆம் நிதியாண்டில் “மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்” திட்டத்தின் கீழ் அரசாணை வரப்பெற்று வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்த மொத்தம் 220 எண்களுக்கு ரூ.15,000- வீதம் ரூ. 33 லட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளி கிணறு, குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 என இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.
சென்னையில் உள்ள வேளாண்மை பொறியியல் தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட மின்மோட்டார் பம்புசெட்டு மாடல்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும்; விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே மானியத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு பதிவு செய்து பயனடைந்தவர்களும், புதியதாக சொட்டுநீர் பாசனத்துடன் துணை நீர் மேலாண்மைத் திட்டம்- மின்மோட்டாருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற் பொறியாளரை 9655708447 என்ற எண்ணிலும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற் பொறியாளரை 9443276371 என்ற எண்ணிலும், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள்; திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளரை 8778426945 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu