போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்: தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ஆல்கஹாலிக் அனானிமஸ் (AA) என்ற மறுவாழ்வு குழுவின் 9 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
போதை பழக்கத்தில் இருந்து வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகும். நமது வாழ்க்கையின் அணுகுமுறையை நல்ல பாதையில் மாற்றிக் கொண்டாலே வாழ்க்கை சிறப்பாக அமையும். நமது உடலை பேணி காப்பது நமது முக்கிய கடமையாகும்.
வாழ்க்கையில் நாம் சுய மரியாதையுடன் நடந்து கொண்டாலே வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி, அதற்கென ஒரு எல்லை, கட்டுப்பாடு மற்றும் அதை எவ்வாறு விளையாட வேண்டுமென விதிமுறைகள் உள்ளதோ, அதை கடைபிடித்து விளையாடினால் மட்டும்தான் வெற்றி இலக்கை அடையமுடியும்.
அதுபோல நமது வாழ்க்கையிலும் நமக்கென்று கட்டுப்பாடு மற்றும் நல்ல விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதை கடைபிடித்தால்தான் உயர்ந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக திகழ முடியும். மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது எதிர்கால சந்ததியினரையும் முழுமையாக பாதிப்படையச் செய்கிறார்கள். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசமே சிந்திக்கும் திறனாகும். நமது எண்ணங்கள் நேர்மறையாக இருந்தாலே நமது வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும்.
உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை செய்து, நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, அடுத்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். உங்களது நல்ல எண்ணங்கள் உங்களையும் உயர்வடையச் செய்து, சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நீங்களும், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவரும் எதிர்மறையான எண்ணங்களை விடுத்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு சமுதாயத்தில் சிறப்பானவர்களாக வருவோம் என்று காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆல்கஹாலிக் அனானிமஸ் என்ற மறுவாழ்வு குழுவின் உறுப்பினர்களான ரெனால்ட் மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu