படிப்பு சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

படிப்பு சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
X

தூத்துக்குடியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

நமது படிப்பு சமுதாயத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர், மாணவிகளுக்கு வழங்ககூடிய இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது‌. இந்த நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு அந்த பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 368 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார்‌.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

மாணவிகள் அனைவரும் மிகவும் தன்னம்பிக்கையுடன் படியுங்கள். கல்வி என்பது நம்முடைய அறிவாற்றலை கூர்மையாக்கக் கூடியதும், அறிவாற்றலை தரக்கூடியதும் ஒன்று. மாணவிகள் நல்ல சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்களாக வர வேண்டும்.

படிப்பு என்பது அரசு வேலைக்குதான் என்பது இல்லை. படிப்பு என்பது நமது அறிவு ஆற்றலை பெருக்கி கொள்ளவும் உதவும். அதைபோல் படித்து முடித்தவுடன் அரசு வேலையை மட்டும் நம்பி இல்லாமல் சுயதொழில் செய்யலாம். தனியார் பணிகளையும் செய்யலாம்.

ஏதோ ஒரு வகையில் நம் படிப்பு என்பது சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டும். அதைபோல் எதிர்காலத்தில் நமது குடும்பத்தினருக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.

நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்ச்சி செய்தால் எல்லாம் எளிதாக கிடைக்கும். முதல்வர் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் எனது இரு கண்கள். வருங்கால சமுதாயத்தை உருவாகக்கூடிய ஒன்று என முதல்வர் கூறுவார்.

அதைபோல் மாணவர்களாகிய உங்களை எல்லாம் பண்பாளர்களாக உருவாகக்கூடிய துறை இந்த கல்வி ஆகும். எனவே அனைவரும் சான்றோர்களாக படித்து வெளியே வர வேண்டும் என வாழ்த்துகின்றேன் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!