கல்வியும், மருத்துவமும் முதல்வரின் இரு கண்கள்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

கல்வியும், மருத்துவமும் முதல்வரின் இரு கண்கள்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
X

தூத்துக்குடியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

கல்வியும், மருத்துவமும் தனது இரு கண்களாக கருதி முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடியில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஞானம்மாள் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 269 பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதேபோல, கல்வியும், மருத்துவமும் தனது இரு கண்கள் எனக் கருதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாணவிகள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே செல்போன்களை பார்க்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்களை பார்க்கும் போது அதில் லைக், கமாண்ட், பண்ண கூடாது உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். நீங்கள் படிக்கக்கூடிய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். ஆகையினால் கவனமாக படிக்க வேண்டும் என மாணவிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.‌

நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!