துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறுவோரை நம்ப வேண்டாம்: துறைமுக நிர்வாகம்

நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் முக்கியமான துறைமுகமாக திகழ்வது தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம். இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வேலை பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வரும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது. தூத்துக்குடி வ. உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் என்பது இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.
வ.உ.சி. துறைமுகத்தில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணியில் அமர்த்தும் செயல்முறை, துறைமுக விதிமுறைகள் மற்றும் ஆட்சேர்ப்பு விதிகளைப் (Recruitment Rules) பின்பற்றி அரசாங்கக் கொள்கையின்படி செய்தித்தாள், விளம்பரங்கள் மற்றும் துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://vocport.gov.in) போன்றவற்றின் மூலம் உரிய விளம்பரங்கள் செய்து வெளிப்படையான முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், துறைமுகத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் வேலை வாங்கி தருவதாக செயல்களில் ஈடுபடுவதாக தகவல் தெரிய வருகிறது. எனவே, பொதுமக்கள் விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களால் ஏமாற்றப்பட வேண்டாம் என்று துறைமுகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று தருவதாக உறுதியளிக்கும் அத்தகைய போலி அமைப்புகள் அல்லது நபர்களிடம் பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu