ஆன்லைனில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்: தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
தூத்துக்குடி அனல்மின் நிலைய உள்அரங்கில் வைத்து அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் செல்போன் பயன்பாட்டையே அதிகம் உபயோகப்படுத்துகின்றனர். செல்போன் மூலமாக நமக்கு தேவையான அனைத்தும் இருந்த இடத்திலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது. இதனால் ஏற்படும் சைபர் குற்றங்களிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும், சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே தாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று தாமதமாகத்தான் தெரியவருகிறது.
சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தும்போது அதில்வரும் தேவையில்லாத லிங்குகளை தரவிறக்கம் செய்யவேண்டாம். அவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும்போது நமது சுயவிவரங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்லைனில் முதலீடு செய்து அதிகலாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.
மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றும், தங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் போன்றும் தொடர்பு கொண்டு பரிசு கூப்பன் விழுந்துள்ளதாக கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற வேண்டாம், செல்போன்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகி விடக்கூடாது.
குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்தும்போது நமது கண்காணிப்பிலேயே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதே போன்று சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கோ, அழைப்புகளுக்கோ பதில் அளிக்க வேண்டாம். வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி ஏடிஎம் கார்டு எண்களை கேட்டு வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதால் பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளில் நீங்களோ குழந்தைகளோ ஈடுபடுவதை தவிர்க்கவும். பெண்கள் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படைங்களையோ அல்லது சுய விவரங்களையோ பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். நமது எண்ணங்கள் நல்ல சிந்தனைகளை நோக்கியே இருக்க வேண்டும்.
ஆகவே செல்போன்களை பயன்படுத்தும்போது மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடாமல், உங்கள் பொன்னான நேரத்தை உடற்பயிற்சி செய்வதில் செலவிடுங்கள், குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள், உடற்பயிற்சியினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னியுங்கள் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்லிக்கொடுத்து வளருங்கள், நீங்களும் பிறரிடம் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாருங்கள் நமது சமுதாயம் எந்த பிரச்சினைகளும் இல்லாத மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு போலீசார் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu