நீட் தேர்வு செய்யக்கோரி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி ஆகியவை சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது,
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவை இல்லை என தி.மு.க .தொடர்ந்து போராடி வருகிறது.சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருந்தது. அந்த நிலையை மாற்றியது திராவிட இயக்க ஆட்சி. அடுத்து புதியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. தற்போது நீட் தேர்வை எதிர்த்து போராடவிட்டால் அவர்கள் நமது குழந்தைகள் எந்தக் கல்லூரிகளிலும் படிக்க முடியாத நிலையை கொண்டுவந்துவிடுவார்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.
தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகளுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை கனிமொழி எம்.பி. முடித்து வைத்தார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu