தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
X
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் கார வகைகளின் தரத்தினை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட நிறுவனங்களில் இருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் பண்டிகை காலத்தில் உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும், பலகாரத் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்டது.

அதில் உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு நடைமுறைகள் அவர்களுக்கு விளக்கப்பட்டன. இருப்பினும், ஆட்சித் தலைவர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுரைகளை உணவு வணிகர்கள் பின்பற்ற தவறுவது என்பது, வணிகர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடிய செயல் என்று எச்சரிக்கப்படுகின்றது.

ஸ்வீ்ட் ஸ்டால் மற்றும் தற்காலிக ஸ்வீட் விற்பனையாளர்கள் பொட்டலமிடப்பட்ட பலகாரங்கள் மற்றும் மூல உணவுப் பொருட்களில் தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும். பலகாரம் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலகாரங்களை ஈக்கள் மொய்க்காவண்ணம் சுகாதாரமாக விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணம் பயன்படுத்த கூடாது. அனுமதிக்கப்பட்ட வண்ணத்தினை 100ppm அளவிற்குள் பயன்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்வீட் விநியோகம் செய்தல், பண்டிகை கால தற்காலிகக் கடைகள் ஆகியவற்றிற்கு உணவு பாதுகாப்பு உரிமம் மிகவும் அவசியம் ஆகும். அவ்வுரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னர் உணவு வணிகம் புரிவதும், உணவு பாதுகாப்பு உரிமத்தில் அனுமதிக்கப்படாத உணவுப் பொருட்களை தயாரிப்பதும் சட்ட விதிமீறல் என்பதால், உணவு பாதுகாப்புத் துறையால் சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனம்/கடை மூடப்படும் என்பதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

நுகர்வோர்களும் உணவுப் பொருட்களை வாங்கும் போது, கடைக்கு FSSAI உரிம எண் உள்ளதா என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!