தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.. ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள்..
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கி கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு மூலம் ஏற்கெனவே தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் பேரில் 13 குடும்பத்தினருக்கும் கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன்–மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை ஏற்கெனவே தமிழக அரசால் மூடப்பட்டு, இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அரசுக்கு மூன்று முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.
அதன்படி, துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வேலையை கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டத்தில் தொடர்பு இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 94 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்று பரிந்துரைகளையும் ஏற்று அதற்கான ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்தார். ஏற்கெனவே, துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு 20 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் அரசு வழங்கி உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு மொத்தம் 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்து இருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வழங்கினார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையில், 17 காவல்துறையினர், மூன்று வருவாய்த் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 4 காவல் துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலர், ஸ்டெர்லைட் ஆலை மீது கூடுதலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக, டிசம்பர் 12 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதுவரை மூன்று முறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி நடவடிக்கை தொடரும் என்றும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கையை அவர்களிடம் தெளிவு படுத்தி உள்ளோம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டமைப்பை சேர்ந்த 50 முதல் 60 பேர் வரை வந்து மனு அளிப்பதாக தெரிவித்து உள்ளனர். எனவே, யாரும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குக்குப் பிறகு பேசி கொள்ளலாம். எனவே, சமூக வலைதளங்களில் யாரும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu