அரசு விடுமுறை நாட்கள் மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது: ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளும், கணக்கெடுப்பு பணிகளும், சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சித் துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை பணியாளர்களும் தற்போது களப் பணியாற்ற வேண்டிய முக்கியமான சூழ்நிலையில் தங்களுடைய அலுவலகத்தில் உடனே ஆஜராகி சுணக்கமின்றி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்ட தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஆஜராகவும் அறிவுறுத்துப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும், அனைத்துத் துறை பணியாளர்களும் உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தலைமை அலுவலர்களிடம் அறிக்கை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளும், கணக்கெடுப்பு பணிகளும், சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொருந்தாது. இந்த சீரிய பணியில் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu