தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ. 58.67 கோடி செலவில் 13630 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பிற துறைகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தின்படி புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் கொண்டு வர வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த இருக்கின்ற அனைத்து வசதிகளையும் மேற்பார்வையிடப்பட்டது. மாநகராட்சி, போக்குவரத்துத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை அதைப்போல வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலமாக இந்த புதிய பேருந்து நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் வந்து போவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நாளையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன் பிறகு வேறென்ன தேவைகள் இருந்தாலும் தொடர்ந்து சரிசெய்து தருவோம். மினிபஸ்கள் பிறகு இயக்கப்படும்.
பேருந்து நிலையத்தில் மக்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கும்பட்சத்தில்; மாநகராட்சி மூலம் சரிசெய்யப்படும். பயணிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கோ, மாநகராட்சிக்கோ தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வீருகாட்டான், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் அழகிரிசாமி, தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu