ஜாதிய அடையாளங்களுடன் கூடிய பெயர்களை மாற்றுங்கள்: தூத்துக்குடி ஆட்சியர் கடிதம்

ஜாதிய அடையாளங்களுடன் கூடிய பெயர்களை மாற்றுங்கள்: தூத்துக்குடி ஆட்சியர் கடிதம்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகதலைவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தின் தலைவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அனுப்பியுள்ள கடிதம் விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமான முண்டாசுக் கவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை தொடங்குவது மிகப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில்,இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே ”"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 (1) இன்படி"மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் அல்லது இவற்றில் ஒன்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் அணைத்து மக்களும் எவ்வித ஜாதி, மத மற்றும் சமூக பாகுபாடின்றி சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அரசின் எல்லா திட்டங்களும், சலுகைகளும், உரிமைகளும் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என பல நிகழ்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 15.08.2023 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் வட்டம், மேலஆத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது அந்த கிராமத்தின் தெருக்கள் ஜாதிய அடையாளங்களுடன் இருப்பதை அறிந்தேன்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் தெருக்களின் பெயர்களில் ஜாதிய அடையாளங்களை நீக்கி பொதுவான பெயர்களை சூட்ட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலையர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமனதாக முடியு செய்து சாதிய அடையாளங்களுடன் இருந்த 9 தெருக்களின் பெயர்களை மாற்றியமைக்க தீர்மானம் கொண்டுவந்து அனைவரின் ஆதாவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வை அனைவரும் அறிவீர்கள். அந்த நிகழ்வு பல்வேறு மக்களுடைய மனதில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டதுடன் இத்தகைய பாகுபாடு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்தியது.

அந்த தாக்கத்தை மாவட்ட நிர்வாகத்தின் ஒவ்வொரு நிலைக்கும் எடுத்துச் செய்வதை எனது கடமையாக நினைக்கிறேன். எனவே, "மாற்றத்தை விரும்பினால் அது நம்பிடமிருந்து ஆரம்பிக்கட்டும்" என்ற சமூக கோட்பாட்டின்படி சமுதாயத்திலுள்ள ஜாதி மத பேதங்களை ஒழிக்க தேவையான செயல்பாடுகளை நம்மிலிருந்து தொடங்குவதே சாலச்சிறந்தது எனக் கருதுகிறேன்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்கெனவே நடத்தியதன் விளைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொது இடங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிய அடையாளங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அழித்து உள்ளனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஆளுகைக்குட்ட பகுதிகளில் ஜாதிய அடையாளங்களுடன் உள்ள தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களின் பெயர்களை அழகிய தமிழ் பெயர்களில் மாற்றம் செய்யும் பட்சத்தில் பாகுபாடில்லாத ஒரு சமுதாயத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வருங்கால தலைமுறையினர் ஜாதி, சமய பாகுபாடற்ற சமத்துவ, சகோதரத்துவ சமூகமாக வாழ இந்த மாற்றம் அவசியமானது எனக் கருதுகிறேன். அதை மனதில் கொண்டு தங்கள் பகுதிகளில் ஜாதிய அடையாளங்களுடன் அமைந்துள்ள தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களின் பெயர்களை திருத்தம் மேற்கொள்வதற்கு அனைத்து மக்களின் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அந்த பெயர்களை அரசிதழில் வெளியிட்டு நிரந்தரமாக மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகம் சார்பாக உறுதியளிக்கிறேன். அந்த இடங்களுக்கு நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமிழின் தொன்மையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பெயர்கள் அமையும் பட்சத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே, மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகிறேன். மேலும் "சிறுதுளி பெருவெள்ளம்" என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்திலும், சமூகத்திலும் தமிழக அரசின் சமூகநீதி மற்றும் சமத்துவ நிலைப்பாட்டிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இந்த மாற்றத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெடுப்பினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி தூத்துக்குடி மாவட்டத்தை ஜாதி, சமய பாகுபாடற்ற சமத்துவ, சகோதரத்துவ சமூகமாக முழுமையாக மாற்றம் செய்திட ஒத்துழைப்பு நல்கிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா