தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1250 டன் டன் ஜிப்சம் வெளியேற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1250 டன் டன் ஜிப்சம் வெளியேற்றம்
X

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வெளியேறிய லாரி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 1250 டன் ஜிப்சம் வெளியேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதையெடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஒரு தரப்பினும், ஆலையை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி கேட்டு ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கழிவுகளை அகற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில்படி ஆலையில் இருந்து கழிவுகளை மாவட்ட நிர்வாகம் தரப்பில் அமைக்கப்படும் கண்காணிப்பு குழு முன்னிலையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு சார்பில், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கான ஆய்வு பணிகளை ஸ்டெர்லைட் ஆலையில் பல நாள்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் சார் ஆட்சியர் கௌரவ்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் சிசிடிவி கேமரா மற்றும் ஆலை உள்ளே செல்லும் வாகனங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகியவை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட உள்ள ஜிப்சம் கழிவுகளை உடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு எஃப் எல் இயந்திரங்களை கண்காணிப்பு குழுவினர் ஆலை உள்ளே அனுமதித்து சிப்சம் கழிவு உடைக்கும் பணி துவங்கப்பட்டது.

ஜிப்சத்தை உடைக்கும் பணி துவங்கிய நிலையில், அகற்றப்பட்ட கழிவுகள் கடந்த 23 ஆம் தேதி முதல் வெளியே கொண்டுவரப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் ஜிப்சம் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளே 11 லாரிகள் அனுமதிக்கப்பட்டு சுமார் 430 டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்படும் ஜிப்சம் லாரிகள் மூலம் விருதுநகர் மாவட்டம் ஆர் ஆர் நகரில் அமைந்துள்ள சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் அமைந்துள்ள சிமெண்ட்ரி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 1250 டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business