திருச்செந்தூர் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருச்செந்தூர் கோவில் - கோப்புப்படம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக தைப் பொங்கல் திருநாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் பழக்கமாக உள்ளது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி முருகப் பெருமானை தரிசிக்க கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களில் திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாளை ( திங்கட்கிழமை) பொங்கலன்று முருகப்பெருமானை தரிசிப்பதற்காக திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் காணப்பட்டது.
கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (15ம் தேதி) தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu