தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை
தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டத்தில் பள்ளி மாணவிக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பண்ணையார், மாவட்டத் துணைச் செயலாளர் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள அனைவருக்கும் மாதாந்திர மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரை சூட்டியதைப் போல் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதை நடும் மகத்தான பணியினை வெற்றிகரமாக செய்து முடித்து உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu