தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: மேயர் ஆய்வு
தூத்துக்குடி கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து கிடந்தது பற்றி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் சிவன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில் உள்ளன. கோடை காலத்திலும் இந்த குளத்தில் தண்ணீர் குறையாமல் காணப்படுவது உண்டு.
இந்த நிலையில், தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் நேற்று திடீரென இறந்து மிதப்பதாக தகவல் பரவியது. அந்தப் பகுதியில் திரண்ட மக்கள் தெப்பக்குளத்தில் கழிவுகள் அதிகளவு சேர்ந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தெப்பக்குளத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று பார்வையிட்டார். இதுகுறித்து அந்தப் பகுதி மக்களிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார். கோடையில் நீர் நிறைந்து காணப்பட்டாலும் சுகாதாரமாக இல்லாமல் இருப்பதாகவும் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாக அந்தப் பகுதி மக்கள் மேயரிடம் தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
தெப்பக்குளத்தின் கரையை சுற்றிலும் பேவர் பிளாக் கற்களும் வண்ண விளக்குகளும் உட்காருவதற்கான இருக்கைகளும் அமைக்கப்படும். மேலும் குளத்தின் நீரை சுத்தப்படுத்துவர்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மீன்வளக் கல்லூரியில் கேட்டும் குளத்தின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ செயற்கை நீருற்று மற்றும் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது, தி.மு.க. பகுதி கழக செயலாளரும், மாநகராட்சி பொதுசுகாதரக்குழு தலைவருமான சுரேஷ்குமார், தி.மு.க. மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், தி.மு.க. வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தி.மு.க. பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu