தூத்துக்குடி மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஆபத்து
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்போர் முறையாக கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்காத காரணத்தால் சாலைகளில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகின்றன.
நெடுஞ்சாலைகளில் வளர்ந்துள்ள புல்லை தின்பதற்காக சாலைகளின் இருபுறமும் கால்நடைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வேகமாக வரும்போது கால்நடைகள் குறுக்கே வருவதாலும் கால்நடைகளுக்கு இடையே சண்டையிட்டு சாலையில் ஓடுவதாலும் விபத்து ஏற்பட்டு உயிர்ப் பலி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே உள்ள நடு நாலு மூலை கிணறு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சதீஷ் பணி முடிந்து பரமன்குறிச்சி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது பரமன்குறிச்சி பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்ற அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நடு நாலுமூலை கிணறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான ஆசிரியர் சதீஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோன்று தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நாள்தோறும் கால்நடைகள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிற்பதால் ஏற்படும் விபத்து காரணமாக விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிடித்து உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து கோ சாலைகளில் சென்று அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கால்நடைகளால் ஏற்படும் விபத்தில் பலியானவர்களுக்கு மற்றும் காயம் அடைபவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu